இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 20-ம் தேதி கையெழுத்தான நிலையில், வணிகர்கள் சுங்கவரிச் சலுகைகளைப் பெற உதவும் வகையில் வர்த்தகம் தொடர்பான மூலத் தரவுகளை மின்னணு முறையில் பரிமாறிக்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MoC) கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த ஏற்பாடு இரு நாடுகளின் சுங்க அதிகாரிகளுக்கும் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் தகவல்கள் மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும். இதன் மூலம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பொருட்கள் முன்னுரிமைத் தீர்வைக் கட்டணச் சலுகைக்குத் தகுதி பெறுகின்றனவா என்பதை அவர்களால் சரிபார்க்க முடியும்.
மேலும், திறமையான, பாதுகாப்பான மற்றும் கணிக்கக்கூடிய எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா மற்றும் நியூசிலாந்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.